புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது

அரசு துறைகளின் அறிக்கை தாக்கலுடன் புதுவை சட்டசபை இன்று கூடுகிறது.

Update: 2023-02-02 16:39 GMT

புதுச்சேரி

அரசு துறைகளின் அறிக்கை தாக்கலுடன் புதுவை சட்டசபை இன்று கூடுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு 30-ந்தேதியுடன் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. விதிப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும்.

இன்று கூடுகிறது

அதன்படி, புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

கூட்டத்தை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கிவைக்கிறார். கூட்டத்தில் இரங்கல் தீர்மானம், அரசுத்துறைகளின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது. அரசு தீர்மானங்களும் கொண்டுவரப்பட வாய்ப்புகள் உள்ளது.

மாநில அந்தஸ்து தீர்மானம்

மாநில அந்தஸ்து தொடர்பாக ஏற்கனவே சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தற்போது மாநில அந்தஸ்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் மீண்டும் மாநில அது தொடர்பான தீர்மானமும் புதுவை அரசு சார்பில் கொண்டுவரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கூட்டம் ஒரு நாள் மட்டுமே நடக்கிறது.

மத்திய பட்ஜெட்டில் புதுவை மாநிலத்துக்கு என ரூ.3 ஆயிரத்து 124 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாநில திட்டக்குழு கூடி புதுவை மாநிலத்துக்கு ரூ.11 ஆயிரத்து 600 கோடியில் பட்ஜெட் தயார் செய்வது என்று இறுதி செய்யப்பட்டு மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

மார்ச் மாதம் பட்ஜெட்

அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தில் மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை இன்று கூட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து சபாநாயகர் செல்வம் நேற்று கூட்டம் அரங்கில் ஆய்வு செய்தார். அப்போது சட்டசபை செயலாளர் தயாளனும் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்