புதுவை சட்டசபை பட்ஜெட் தொடர் 10-ந்தேதி தொடக்கம்

புதுவை சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேரும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் உள்ளனர்.

Update: 2022-07-26 18:10 GMT

புதுச்சேரி

புதுவை சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேரும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் உள்ளனர்.

இடைக்கால பட்ஜெட்

புதுவை மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு அதன்பின் சில மாதங்கள் கழித்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதன்படி கடந்த மார்ச் மாதம் ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில திட்டக்குழு கூட்டம் கூடி சுமார் ரூ.11 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை தயாரிக்க ஆலோசனை நடத்தியது.

சட்டசபை கூடுகிறது

இதையடுத்து புதுவை சட்டசபை வருகிற 10-ந்தேதி கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

15-வது சட்டசபையின் 3-வது கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார்.

புதுவை மாநிலத்துக்கான பட்ஜெட்டிற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

முழுமையான பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் தொடர்பாக தொழில்நுட்பத்துறையுடன் பேசி வருகிறோம்.

தணிக்கை குழு கூட்டம்

கடந்த 2012-க்கு பிறகு புதுவை அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் கணக்கை அதிகாரிகள் தணிக்கை துறைக்கு சரிவர தாக்கல் செய்யவில்லை. இதற்காக தனி தணிக்கைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம் பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுக்கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். துறைகளின் செலவு கணக்குகளை சமர்ப்பித்த பின்னர்தான் நிதியை ஒதுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கணக்குகளை முறையாக ஒப்படைக்கும்போதுதான் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக நிதி கிடைக்கும்.

பதாகைகளுக்கு தடை

புதுவையில் பெரும்பாலான அதிகாரிகள் தற்போது முறையாக செயல்பட தொடங்கியுள்ளனர். இன்னும் 25 சதவீத அதிகாரிகள் ஏனோதானோவென்று இருக்கின்றனர். அவர்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

புதுவை சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்த பொறுப்பினை டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளோம். புதுவை சட்டமன்ற கூட்டத்தின்போது கூட்ட அரங்கில் பதாகைகள், பேனர்கள் எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்