மக்கள் குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

மக்கள் குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2023-10-16 16:54 GMT

காரைக்கால்

மக்கள் குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

குறைதீர் முகாம்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்கள் ஜான்சன், வெங்கடகிருஷ்ணன், செந்தில்நாதன், வனத்துறை அதிகாரி விஜி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர், கடந்த மாதம் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 195 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  பாராட்டினார்.

244 மனுக்கள்

தொடர்ந்து நடைபெற்ற முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதில் 90 மனுக்கள் மஞ்சள் நிற ரேஷன் அட்டையை சிவப்பு நிற ரேஷன் அட்டையாக மாற்றி தரவும், 10 மனுக்கள் எல்.ஜி.ஆர். பட்டா வேண்டியும், மழைக்காலத்திற்கு முன்னதாக கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்வது, குடியிருப்பு பகுதியில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றுவது உள்பட மொத்தம் 244 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், தீர்வு காணும் விபரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கும் படியும், கலெக்டர் அறிவுறுத்தினார்.

மனைப்பட்டா

முன்னதாக, சுதந்திர போராட்ட வீரர் சீனிவாசன், தனக்கு ஏற்கனவே வழங்கிய எல்.ஜி.ஆர். பட்டாவின் கீழே, கெயில் நிறுவனத்தின் பைப் செல்வதால், அந்த இடத்துக்கு பதிலாக வேறு இடத்தில் மீண்டும் பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு வழங்கினார். இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து, திருநள்ளாறு தேவமாபுரத்தில் புதிய எல்.ஜி.ஆர். பட்டா சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்