ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
புதுவை சட்டசபையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி
புதுவை சட்டசபையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி தேர்தல்
இந்திய நாட்டின் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா களம் காணுகிறார். இருவரும் மாநிலங்கள் தோறும் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஆதரவு திரட்டுகிறார்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான திரவுபதி முர்மு கடந்த 2-ந்தேதி புதுச்சேரி வந்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினார். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உள்பட 10 என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 6 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், 3 பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா சென்னை வந்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருக்கு புதுவையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் ஆதரவாக உள்ளனர்.
சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள்
புதுவையை பொறுத்தவரை எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 16 ஆக உள்ளது. எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 700 ஆகும். அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு 20 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்பி.யின் ஆதரவு உள்ளது. யஷ்வந்த் சின்காவுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் ஒரு எம்.பி.யின் ஆதரவு உள்ளது.
இன்னும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நேரு, பி.ஆர்.சிவா ஆகியோரின் வாக்கு யாருக்கு? என்று இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக நேரு எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது கூறியதாவது:-
ஆதரவு கேட்கவில்லை
ஜனாதிபதி தேர்தலில் எங்களிடம் எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ இதுவரை ஆதரவு கேட்கவில்லை. புதுவை அரசியலில் எங்களை பொறுத்தவரை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு ஆதரவாக உள்ளோம். அவருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஆதரவு அளிப்போம். ஆனால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
அதேநேரத்தில் பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் திரவுபதி முர்மு நல்ல வேட்பாளராக தெரிகிறார். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே பொறுத்திருந்து நல்ல முடிவை எடுப்போம்.
இவ்வாறு நேரு எம்.எல்.ஏ. கூறினார்.
ஏற்பாடுகள் தீவிரம்
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வாக்குப்பதிவு சட்டசபை செயலகத்தின் 4-வது மாடியில் உள் கமிட்டி அறையில் நடைபெற உள்ளது.
வாக்குப்பெட்டியானது வருகிற 12-ந்தேதி டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக தரைதளத்தில் சட்டசபை செயலாளரின் அலுவலகம் அருகே உள்ள அறை தயார் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டி டெல்லி கொண்டு செல்லப்படும்.
தேர்தல் ஆணையம்
எம்.பி.க்கள் தங்கள் மாநிலங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளித்து வாக்களிக்கலாம். எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகம், பிற மாநிலங்களுக்கு சென்று வாக்களிக்க விரும்பினால் அதற்கான விண்ணப்ப படிவங்களை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கவேண்டும். அந்த கடிதங்களை எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பும் பணியிலும் சட்டசபை செயலகம் ஈடுபட்டுள்ளது.
அவற்றை நிரப்பி அவர்கள் அதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவேண்டும். 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இதற்கான கடைசி நாள் ஆகும். தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் பட்சத்தில் அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாக்களிக்கலாம்.