பிரணவ் நகைக்கடை மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.82 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பிரணவ் நகை மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-20 17:19 GMT

புதுச்சேரி


புதுவை காமராஜர் சாலையில் பிரணவ் என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வந்தது. இங்கு மாதாந்திர நகை சேமிப்பு திட்டத்தில் புதுவை, கடலூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பணம் கட்டி வந்தனர்.

சேமிப்பு திட்டம் நிறைவடைந்த நிலையிலும், கடை நிர்வாகம் அவர்களுக்கு நகை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காசோலை திரும்பியது

இதைத்தொடர்ந்து நிர்வாகம் சார்பில், வாடிக்கையாளர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. ஆனால் அந்த காசோலை பணமின்றி திரும்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் இன்று மீண்டும் காமராஜர் சாலையில் உள்ள கடைக்கு வந்தனர். ஆனால் நகைக்கடை மூடிக்கிடந்தது. அங்கு காவலாளி மட்டுமே பணியில் இருந்தார்.

ரூ.82 லட்சம் மோசடி

இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பெரியகடை போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அவர்கள், நகைக்கடை சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலை நகல், புகார்களை இணைத்து நகைக்கடை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களின் பணத்தை மீட்டு தர வேண்டியும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். அந்த வகையில் 46 பேரிடம் ரூ.82 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலர் பணம் கட்டி ஏமாந்திருப்பது தெரியவந்ததுள்ளது. இதனால் புகார்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்