பாண்லே பால் தொடர்ந்து தட்டுப்பாடு

புதுவையில் பாண்லே பால் தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பால் முகவர்கள் சிலர் தமிழகத்தின் ஆவின் பாலை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

Update: 2022-10-18 17:19 GMT

புதுச்சேரி

புதுவையில் பாண்லே பால் தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பால் முகவர்கள் சிலர் தமிழகத்தின் ஆவின் பாலை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

பால் தட்டுப்பாடு

புதுவை மாநிலத்தின் அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பால் தேவை நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் லிட்டராக உள்ளது. மாநிலத்தின் பால் தேவையை பூர்த்திசெய்ய கர்நாடக மாநில கூட்டுறவு பால் சொசைட்டியில் இருந்து 20 ஆயிரம் லிட்டரும், தனியாரிடம் இருந்து 5 ஆயிரம் லிட்டரும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் புதுவையில் பால் உற்பத்தி குறைந்துள்ளதால், நாள்தோறும் சுமார் 15 ஆயிரம் லிட்டர் அளவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்லே நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு தேவையான பாலை சப்ளை செய்ய முடியவில்லை.

பேச்சுவார்த்தை

ஒரு சில பாண்லே பூத்துகளில் மட்டும் பால் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர். பெரும்பாலான பாண்லே பூத்துகளில் பால் இல்லை என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பால் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

பால் தட்டுப்பாட்டை போக்கிட பாண்லே நிறுவன அதிகாரிகள் கர்நாடக மாநில கூட்டுறவு பால் சொசைட்டி அதிகாரிகள், தமிழகத்தை சேர்ந்த ஆவின் பால் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆவில் பால் விற்பனை

இதற்கிடையே புதுவையில் உள்ள பால் முகவர்கள் சிலர் பாண்லே பால் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்தில் ஆவின் பாலை வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

500 மி.லி. பால் பாக்கெட் ரூ.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் பலர் வாங்கிச் செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்