ரூ.500 மதிப்பில் பொங்கல் தொகுப்பு

ரூ 500 மதிப்பிலான பொங்கல் பரிசு வழங்க அரசு அதிரடி முடிவு

Update: 2022-12-22 17:44 GMT

புதுச்சேரி

புதுவையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.500 மதிப்பில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் புதுவை அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொடர்பான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி 4 மாத இலவச அரிசிக்கான ரொக்கம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்பின் இலவச அரிசிக்கான பணம் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே தீபாவளிக்கு வழங்கியது போல் பொங்கலுக்கும் அரசு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

ரூ.500 மதிப்பிலான தொகுப்பு

இந்தநிலையில் பொங்கல் பொருட்கள் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழகத்தில் எந்தவிதமான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்தும் பேசப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.500 மதிப்பில் 10 விதமான பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 37 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.17 கோடி செலவாகும்.

10 பொருட்கள் எவை?

அதன்படி பச்சரிசி 2 கிலோ, வெல்லம், துவரம் பருப்பு தலா 1 கிலோ, கடலை பருப்பு, பச்சைப் பருப்பு, உளுந்து தலா ½ கிலோ, மஞ்சள் 100 கிராம், முந்திரி பருப்பு 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் ஆகிய 10 பொருட்கள் இந்த தொகுப்பில் இடம்பெற உள்ளது.

இந்த பொருட்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

கடந்த காலங்களில் பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் பல தவணைகளில் வழங்கப்பட்டன. 10 பொருட்களும் மொத்தமாக வழங்கப்படாததால் ஒருசில பொருட்களை வாங்க பலர் முன்வரவில்லை. அதுமட்டுமின்றி காலதாமதமாகவும் இந்த பொங்கல் பொருட்கள் வினியோகம் செய்ததால் அதிருப்தி நிலவியது.

கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் கிடைக்க செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்