தம்பதியின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு
புதுச்சேரியில் தொழில்போட்டியால் தம்பதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட செல்போன் கடைக்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
புதுச்சேரி
புதுச்சேரியில் தொழில்போட்டியால் தம்பதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட செல்போன் கடைக்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தம்பதி ஆபாச வீடியோ
புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டது. இதுகுறித்து அறிந்த அந்த தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தம்பதியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டது, புதுவை அண்ணா சாலையை சேர்ந்த செல்போன் கடைக்காரர் செல்வம் (வயது54) மற்றும் அவரது நண்பர்கள் ஆனந்த் (28), பூவில் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது அண்ணா சாலையில் செல்போன் கடை வைத்துள்ள செல்வத்தின் கடை அருகே தம்பதியினர் செல்போன் கடை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தொழில்போடடி காரணமாக ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்களை பழிவாங்குவதற்காக செல்வம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தம்பதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.