வினாடிக்கு 168 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்

காரைக்கால் பகுதி குறுவை சாகுபடிக்கு தினமும் வினாடிக்கு 168 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-14 16:17 GMT

புதுச்சேரி

காரைக்கால் பகுதி குறுவை சாகுபடிக்கு தினமும் வினாடிக்கு 168 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

காரைக்காலுக்கு தண்ணீர் இல்லை

நடப்பு ஆண்டில் காரைக்கால் மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்ட 3.2677 டி.எம்.சி.க்கு பதிலாக கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் அக்டோபர் 11-ந்தேதி வரை ஒட்டுமொத்தமாக 0.8191 டி.எம்.சி. மட்டுமே காவிரி நீர் கிடைத்துள்ளது. பற்றாக்குறை 1.4486 டி.எம்.சி. ஆகும். அதாவது 74.93 சதவீதம் குறைவாக தண்ணீர் கிடைத்துள்ளது.

காரைக்கால் பகுதிக்கு இந்த மாதத்துக்குள் 1.600 டி.எம்.சி. காவிரி நீர் ஒதுக்கப்பட வேண்டும். காரைக்கால் பகுதி புதுச்சேரி பிராந்தியத்தின் நெல் சாகுபடியில் முக்கிய ஆதாரமாக உள்ளது. குறைந்த மற்றும் நிலையில்லாத நீர் வரத்தினால் காரைக்கால் பகுதி விவசாயிகள் குறுவை சம்பா மற்றும் தாளடி பயிர் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டது.

வினாடிக்கு 168 கன அடி

கடந்த 12-ந்தேதி காரைக்கால் விவசாயிகள் காவிரி நீர் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் தவிக்கின்றனர். மேலும் சரியான நேரத்திற்கு காவிரி நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் தாளடி பயிர் சாகுபடியை ஆரம்பிக்க காரைக்கால் விவசாயிகள் அச்சப்படுகிறார்கள்.இதனால் புதுவை அரசு செயலாளரும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினருமான மணிகண்டன் காரைக்கால் பகுதியின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய போதிய அளவு காவிரி நீர் திறக்க வற்புறுத்தினார்.

அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை 16 நாட்களுக்கு காரைக்கால் பகுதிக்கு தினசரி வினாடிக்கு 168 கன அடி காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்