ஆன்லைன் நிறுவன வங்கிக் கணக்கு முடக்கம்

புதுவையில் தரம் குறைந்த பொருளை அனுப்பி மோசடி செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கி வைத்தனர்.

Update: 2023-07-08 17:48 GMT

புதுச்சேரி

தரம் குறைந்த பொருளை அனுப்பி மோசடி செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கை புதுவை சைபர் கிரைம் போலீசார் முடக்கி வைத்தனர்.

ஆன்லைன் விளம்பரம்

நவீன உலகில் வீட்டில் இருந்தபடியே உணவு பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவது அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் இணையதளத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

அதை உண்மை என்று நம்பி பலரும் அதை ஆர்டர் செய்து வாங்குகின்றனர். ஆனால் அந்த பொருட்கள் தரம் குறைந்ததாக இருக்கின்றன. ஆர்டர் செய்த தொகை குறைவானது என்பதால் அதுதொடர்பாக யாரும் மேல் நடவடிக்கை எடுப்பதில்லை.

தரமற்றது

இந்தநிலையில் முத்தியால்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவரான மோதிலால் என்பவர், முகநூல் பக்கத்தில் 'பீல் மார்ட்' என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவன விளம்பரத்தை நம்பி 2 பேண்டுகளை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி அவருக்கு கூரியர் வந்துள்ளது.

அதற்கு ரூ.1,100 கொடுத்துவிட்டு பார்சலை பிரித்து பார்த்தபோது மோதிலால் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஆன்லைனில் பார்த்து ஆர்டர் செய்த பேண்டின் நிறத்துக்கும், தரத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தது. மேலும் 2 பேண்டுக்கு பதிலாக ஒரேயொரு பேண்டுதான் இருந்துள்ளது.

வங்கிக் கணக்கு முடக்கம்

இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட நிறுவனத்தை அவர் தொடர்புகொள்ள முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இதுதொடர்பாக அவர் ஆர்டர் செய்த பில், பணம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றைக்கொண்டு புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

போலீசாரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்புகொள்ள முடியவில்லை. அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கினார்கள்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

நம்பிக்கையான நிறுவனங்கள்

பொதுமக்கள் ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி எந்தவித பொருட்களையும் ஆர்டர் செய்யக்கூடாது. பெரும்பாலான நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றி தரமான பொருட்களை குறைந்த விலையில் கொடுப்பதாக கூறி தரமற்ற உபயோகமில்லாத பொருட்களை வழங்குகின்றனர். அப்படி தரமில்லாமல் ஜவுளி வழங்கிய ஒரு ஆன்லைன் நிறுவனத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே நம்பிக்கையான ஒரு சில நிறுவனங்களில் மட்டும் பொருட்களை வாங்குவது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்