சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை நர்சுகள் முற்றுகை

நர்சு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கக்கோரி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-09-29 23:41 IST

புதுச்சேரி

நர்சு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கக்கோரி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணிநிரந்தரம்

கொரோனா பாதிப்பின்போது புதுவையில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்த அடிப்படையில் 165 நர்சுகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.

மேலும் 3 மாதத்துக்கு ஒருமுறை அவர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முன்னுரிமை

அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, நர்சுகள் பணியிடங்களை நிரப்பும்போது முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்தது. மேலும் அவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் பணிநீட்டிப்பும் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் 105 நர்சு பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை எதுவும் வழங்கப்படவில்லை.

முற்றுகை

இதனால் அதிர்ச்சியடைந்த நர்சுகள் இன்று காலை சட்டசபை அருகே உள்ள பாரதி பூங்காவில் கூடினார்கள். அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கையில் ஈடுபடுவது என்று ஆலோசித்தனர். அப்போது அரசு தங்களுக்கு முன்னுரிமை வழங்காததை கண்டித்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி பாரதி பூங்காவில் இருந்து வெளியே வந்த அவர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை அங்கு செல்லவிடாமல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர்.

குண்டுகட்டாக...

இதைத்தொடர்ந்து அவர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

இதனால் அங்கு பெண் போலீசாரும் வரவழைக்கப்பட்டு தர்ணாவில் ஈடுபட்ட நர்சுகளை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். நர்சுகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளுவும் உருவானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்துக்குள் சென்று அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சி

இதனிடையே நாம் தமிழர் கட்சியினர் அங்கு வந்து நர்சுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர்.

இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் தொழிற்சங்க செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட சில நிர்வாகிகளை மட்டும் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.

நர்சுகளை சந்தித்துவிட்டு வெளியே வந்த அவர்கள், அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மீண்டும் ஒப்பந்த நர்சுகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தொடர்ந்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோசபின் சித்ராவும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக தீர்வு ஏற்படவில்லை. நள்ளிரவை தாண்டியும் நர்சுகள் போராட்டம் தொடர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்