நிலைய அதிகாரி உள்பட 63 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு
புதுவை தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி உள்பட 63 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.;
புதுச்சேரி
புதுவை தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி உள்பட 63 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நிலைய அதிகாரி
புதுவை தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள நிலைய அதிகாரி, தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்த பணியிடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தமுள்ள 5 தீயணைப்பு நிலைய அதிகாரி பணியிடங்களில் 3 இடங்கள் ஆண்களுக்கும், 2 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. நிலைய அதிகாரி பதவிக்கு வயது வரம்பு 20 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு தளர்வுகளும் வழங்கப்படும். விதவைகள், விவாகரத்து பெற்ற பெண்கள் 35 வயது வரை இருக்கலாம்.
உடல்தகுதி தேர்வு
ஆண்களுக்கான உடல்தகுதி தேர்வில் 100 மீட்டர் தூரத்தை 15 வினாடிகளிலும், 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 50 வினாடிகளில் ஓடி கடக்கவேண்டும். 3.80 மீட்டர் நீளம், 1.20 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும். பெண்களுக்கான உடல்தகுதி தேர்வில் 200 மீட்டர் தூரத்தை 45 வினாடிகளில் ஓடி கடக்கவேண்டும். 2.75 மீட்டர் நீளம், 0.90 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும்.
எழுத்து தேர்வு கணிதம், பொது அறிவியல், ஆங்கிலம், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் 50 மதிப்பெண்ணிற்கும், பொதுஅறிவு, தற்பேதைய நிகழ்வுகள், இந்திய அரசியலமைப்பு தொடர்பாக 50 மதிப்பெண்ணிற்கும் கேள்விகள் கேட்கப்படும்.
19 இடங்கள்
இதேபோல் 58 தீயணைப்பு வீரர்கள் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 39 இடங்கள் ஆண்களுக்கும் 19 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுப்பிரிவினருக்கு 24, இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 16, தாழ்த்தப்பட்டோருக்கு 6, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கு 5, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 5, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 5, முன்னாள் ராணுவத்தினருக்கு 6, விளையாட்டு வீரர்களுக்கு 3, பழங்குடியினருக்கு 1 என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு 31-8-2023 அன்று 18 முதல் 24 வயது வரை இருக்கவேண்டும். கல்வி தகுதி 10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தபட்டோர், தாழ்த்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு வயதுவரம்பில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. விதவைக்கும் தனியாக வயதுவரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. உடல்தகுதி தேர்வும் தீயணைப்பு நிலைய அதிகாரி பணியிடங்களுக்கு போன்று நடத்தப்படும். உடல்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
மீண்டும் விண்ணப்பிக்க...
இந்த பணியிடங்களுக்கு https://recruitment.py.gov.in என்ற இணையதள முகவரியில்நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்துள்ள ஆண்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
இதற்கான உத்தரவினை உள்துறை சார்பு செயலாளர் ஹிரன் வெளியிட்டுள்ளார்.