வட மாநில பெண் பலாத்காரம்
புதுவையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வட மாநில பெண்ணை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
புதுச்சேரி, செப்.28-
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வட மாநில பெண்ணை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நட்பாக பழகி பலாத்காரம்
வட மாநிலமான உத்தரப்பிரதேசம் லக்னோவை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் கல்வி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள கடந்த 2020-ம் ஆண்டு புதுச்சேரி வந்தார். அவர் புதுவையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அவ்வப்போது சென்று தங்கியுள்ளார்.
அப்போது அங்கு வரவேற்பாளராக பணி செய்த புதுவை கோரிமேடு அடுத்த தமிழக பகுதியான கலைவாணர் நகரை சேர்ந்த ரெபி பெர்னாண்டஸ் (24) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரெபி பெர்னாண்டஸ் அப்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அப்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
எனக்கு 24, உனக்கு 34
இதற்கிடையே தனது ஆய்வுகளை முடித்துக் கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு புறப்பட தயாரானார். அந்த பெண் ரெபி பெர்னாண்டசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அப்போது அவர் எனக்கு வயது 24, உனக்கு வயது 34. அதாவது, என்னை விட 10 வயது மூத்தவளான உன்னை நான் எவ்வாறு திருமணம் செய்து கொள்ள முடியும்? என்று கூறி மறுத்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அப்பெண் இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
வலைவீச்சு
அந்த புகாரில், 'ரெபி பெர்னாண்டஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பல முறை பலாத்காரம் செய்தார். தற்போது திருமணத்துக்கு மறுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி இருந்தார்.
அதன்பேரில் பெரியகடை போலீசார் இ.பி.கோ. சட்டப்பிரிவு 376ன் கீழ் (கற்பழிப்பு குற்றம்) பிரிவின் கீழ் ஓட்டல் வரவேற்பாளரான ரெபி பெர்னாண்டஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.