காலரா, வயிற்றுப்போக்கால் இதுவரை உயிரிழப்பு இல்லை
காரைக்காலில் காலரா, வயிற்றுப்போக்கால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை எந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என நலவழித்துறை அதிகாரி பேட்டிளித்தார்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காரைக்காலில் குடிநீர் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீரில் கழிவு நீர் கலந்ததாலும், சுகாதாரமற்ற குடி தண்ணீரை குடித்ததாலும் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகின்றது. ஒரு சிலருக்கு காலரா அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் காரைக்கால் நலவழித்துறை எடுத்து வருகின்றது.
காரைக்கால் மாவட்டத்தில் காலரா மற்றும் வயிற்றுப்போக்கால் இதுவரை யாரும் இறக்கவில்லை. சில இணை நோய் உள்ளவர்கள் 2 பேர் கடந்த சில வாரத்திற்கு முன்பு இறந்துள்ளனர். ஆனால் முகநூல், வாட்ஸ்-அப் போன்றவற்றில் வயிற்றுப்போக்கால் இறந்துள்ளதாக தவறான செய்திகளை பரப்புவதாக அறிகிறோம். ஆகையால் பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.