தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு

புதுவை கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2023-06-19 17:30 GMT

புதுச்சேரி

புதுவை கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

செயற்கை மணல் பரப்பு

புதுவை மீன்பிடி துறைமுக பகுதியில் தூர்வாரிய மணலை பழைய துறைமுகத்துக்கும், புதுவை தலைமை செயலகத்துக்கும் இடையே கொட்டி செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அமர்ந்து கடலை ரசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக செயற்கை மணல் பரப்பு கரைந்து வருகிறது. அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றத்தினால் மணல் அரிக்கப்பட்டு வருகின்றன.

கடல் அரிப்பு

குறிப்பாக சீகல்ஸ் ஓட்டல், டூப்ளக்ஸ் சிலை அருகே கடற்கரையில் பெருமளவு மணல் பரப்பு காணாமல் போய் உள்ளது. அங்கு கடல் அரிப்பை தடுக்க கொட்டப்பட்ட பாறைகள் வெளியே தெரிகின்றன. சுமார் 10 அடி உயரத்துக்கு செங்குத்தாக மணல் பரப்பும் அரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு நலன்கருதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அங்கு செல்லாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரும் அதை கண்காணித்து வருகின்றனர்.

விஞ்ஞானிகள் ஆய்வு

இந்தநிலையில் இந்த கடல் அரிப்பு எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் சென்னை தேசிய கடலோர ஆராய்ச்சி மைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அறிவியலாளர் விபின் மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழுவினர் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டனர்.

சீகல்ஸ் முதல் காந்தி சிலை வரை கடற்கரை பகுதியில் நடந்து சென்று இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதுதொடர்பாக அவர்கள் அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்க உள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அலையின் திசை மாற்றம்

வழக்கமாக புதுவையில் கடல் அலையின் போக்கு 9 மாதம் ஒரு திசையிலும், மீதம் 3 மாதங்கள் மற்றொரு திசையிலும் இருக்கும். அதனால் கடற்கரையின் வடக்கு பகுதியில் (தலைமை செயலகம் அருகே) செயற்கை மணல் பரப்பு காணாமல் போவதும், மீண்டும் உருவாவதுமாக இருக்கும். ஆனால் இந்த முறை தெற்கு பகுதியிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு தலைமை செயலகம் அருகே ராட்சத கூம்பு வடிவிலான அமைப்பை உருவாக்கி கடலில் ஆழ்த்தியதுபோல் காந்தி சிலைக்கு தெற்கு பகுதியிலும் அமைக்க வேண்டும். அப்படி செய்தால் இடைப்பட்ட பகுதியில் மணல் தேங்கி அரிப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினா்.

Tags:    

மேலும் செய்திகள்