நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி

புதுச்சேரி நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதனை தடுத்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2022-08-25 16:30 GMT

புதுச்சேரி

புதுச்சேரி நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதனை தடுத்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர் போராட்டம்

புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு போராட்ட குழுவினர் விடுப்பு எடுத்து கடந்த 22-ந் தேதி முதல் மாதா கோவில் வீதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக நடந்தது. போராட்டத்திற்கு கன்வீனர் விநாயகவேல் தலைமை தாங்கினார். ஆனந்த கணபதி முன்னிலை வகித்தார். இதில் உதயகுமார், சேகர், வேளாங்கண்ணிதாசன், கணேசன், பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முற்றுகையிட முயற்சி

அப்போது அவர்கள் திடீரென சட்டசபையை முற்றுகையிடும் நோக்கில் போராட்ட பந்தலில் இருந்து ஊர்வலமாக சென்றனர். ஆம்பூர் சாலை அருகே சென்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரிகார்டு வைத்து அவர்களை தடுத்தனர். அவர்கள் தடுப்பை மீறி செல்ல முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அவர்களை முன்னேறி செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொட்டும் மழையில்...

இதனை தொடர்ந்து அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மழை கொட்டியது. அதை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்களின் 4-வது நாள் போராட்டம் காரணமாக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் 150 பேர் கைது

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை கலெக்டர் அலுவலகம் எதிரே போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலக வாயிலில், ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டத்தில் காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு கன்வீனர் அய்யப்பன், அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். போலீசாரின் எச்சரிக்கையை மீறி ஊழியர்கள் முற்றுகையை தொடர்ந்ததால் சுமார் 150 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்