திரு.வி.க. பள்ளி முன்பு பெற்றோர்கள் போராட்டம்
புதுவையில் மாணவர்களை வேறு பள்ளி கட்டிடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து திரு.வி.க. பள்ளி முன்பு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
மாணவர்களை வேறு பள்ளி கட்டிடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து திரு.வி.க. பள்ளி முன்பு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிகள் மாற்றம்
புதுவையில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. புஸ்சி வீதியில் உள்ள சுப்ரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் (பழைய சட்டக்கல்லூரி) சரியில்லாததால் அங்கு படிக்கும் மாணவிகளை சவரிராயலு வீதியில் உள்ள தமிழ்த்தென்றல் திரு.வி.க. அரசுப் பள்ளி கட்டிடத்துக்கு மாற்றி அதை முழுநேரமும் இயக்க கல்வித்துறை திட்டமிட்டது.
மேலும் திரு.வி.க. பள்ளி மாணவர்களை கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் பள்ளி கட்டிடத்துக்கு மாற்றி அவர்களுக்கு காலை நேரத்திலும், வீரமாமுனிவர் பள்ளி மாணவர்களுக்கு பிற்பகலிலும் சுழற்சி முறையில் (ஷிப்டு முறையில்) வகுப்புகள் நடத்த கல்வித்துறை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது.
பெற்றோர்கள் போராட்டம்
இன்று திரு.வி.க. பள்ளிக்கு வந்த மாணவர்கள் வீரமாமுனிவர் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு திரு.வி.க. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தங்களது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று கூறி பள்ளிக்கூடம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்து தொகுதி எம்.எல்.ஏ.வான நேரு அங்கு விரைந்து வந்தார். அவர் கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். தொகுதி எம்.எல்.ஏ.வான தனக்கே பள்ளிகள் மாற்றம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அப்போது மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட மாட்டார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் திரு.வி.க. பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து வகுப்புகளும் நடந்தன.