கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்

புதுவையில் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

Update: 2023-06-30 16:25 GMT

புதுச்சேரி

கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

கவர்னர் ஆலோசனை

புதுவை சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, இயக்குனர் ஸ்ரீராமுலு, தலைமை மருந்து அதிகாரி ரமேஷ், இணை இயக்குனர் அனந்தலட்சுமி, அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் ஜோதி பாப்லி ஜேம்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சுகாதாரத்துறையின் மேம்பாடு குறித்தும் புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் சுகாதார திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் புதுச்சேரியில் இணைய மருத்துவமனை தொடங்குவதற்கான நடவடிக்கைகள், ஆயுஷ்மான் பாரத், டிஜிட்டல் மிஷன் திட்டம், தொழில்நுட்ப தேவைகள், பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மருத்துவ முகாம்

அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளில் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இந்த மாத (ஜூலை) இறுதிக்குள் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொலை மருத்துவம் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான மருத்துவமனையை தேர்ந்தெடுக்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். சிறப்பாக பணிபுரியும் டாக்டர்களை உற்சாகமூட்டும் வகையில் கவுரவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்