எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கட்டணம் நிர்ணயம்

புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-21 17:37 GMT

புதுச்சேரி

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 180 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்த கல்வியாண்டுக்கு ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 700 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு இந்த கல்வியாண்டு கட்டணம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் நிர்ணயம் செய்யபட்டுள்ளது. தங்கும் விடுதி கட்டணம் தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பி.டெக் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான மாப் அப் (இறுதி கட்ட) கலந்தாய்வு சென்டாக் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 9.30 மணிக்கு புதுச்சேரி மாணவர்களுக்கும், 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கும், 11 மணி முதல் பிற மாநில மாணவர்களுக்கும் இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பி.ஆர்க் படிப்பிற்கான இறுதி கட்ட மாப் அப் கலந்தாய்வு வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இடங்கள் காலி விவரங்களை சென்டாக் இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்