மரப்பாலம் சிக்னலை கைவிட்ட போலீசார்
நெருக்கடியான நேரத்தில் மரப்பாலம் சிக்னலில் போலீசார் பணியில் இல்லாததால் சைக்கிளில் வந்த ஒருவர் களத்தில் இறங்கி போக்குவரத்தை கட்டுப்படுத்தினார்.
புதுச்சேரி
நெருக்கடியான நேரத்தில் மரப்பாலம் சிக்னலில் போலீசார் பணியில் இல்லாததால் சைக்கிளில் வந்த ஒருவர் களத்தில் இறங்கி போக்குவரத்தை கட்டுப்படுத்தினார்.
போக்குவரத்து நெரிசல்
புதுவை மரப்பாலம் சிக்னல் பகுதியில் தற்போது தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக இந்திராகாந்தி சிலையிலிருந்து மரப்பாலம் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்கள் மட்டும் வந்து செல்கின்றன. அந்த வாகனங்கள் செல்ல தனி வழியும் ஏறபடுத்தி தரப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி சிலையிலிருந்து வரும் கனரக வாகனங்கள் புவன்கரே வீதி வழியாக மரப்பாலம் சிக்னலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை 7 மணி தொடங்கி இரவு 9 மணிவரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போலீசார் இல்லை
குறிப்பாக காலை 7 மணிமுதல் 10.30 மணிவரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் பள்ளி, கல்லூரி செல்வோர், அரசு மறும் தனியார் அலுவலகத்துக்கு வேலைக்கு செல்வோர் அதிக அளவில் இந்த பகுதியை கடப்பதால் நெரிசலால் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த சிக்னலில் போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் யாரும் பணியில் இல்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒருவரையொருவர் முந்திக்கொண்டும், இடித்துக்கொண்டும் சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
குடிமகனின் கவனிப்பு
இத்தகைய சூழ்நிலையில் சாதாரண குடிமகன் ஒருவர் அந்த வழியாக சைக்கிளில் வந்தார். போக்குவரத்து நெரிசலை கண்ட அவர் உடனடியாக களத்தில் இறங்கினார். நடுரோட்டில் நின்று லுங்கியை இறக்கி விட்டு, கைகளை காட்டி வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை சரிசெய்துகொண்டிருந்தார்.
வழக்கமாக காவல்துறையினர் சீருடையில் நின்று கட்டுப்படுத்தினாலே மதிக்காத வாகன ஓட்டிகள், தங்கள் பாணியில் அவரை மீறி செல்ல முயன்றனர். அப்போது அந்த நபர் மதிக்காமல் சென்ற வாகன ஓட்டிகளை தனது பாணியில் கவனிக்க ஆரம்பித்தார். சிலரது முதுகில் தனது கைகளால் தாக்கினார். வாகனங்களின் பக்கவாட்டிலும் கைகளால் தட்டி எச்சரித்தார்.
வாக்குவாதம்
அவரது பலமான கவனிப்பை கண்ட வாகன ஓட்டிகள் சிலர் முறையாக வாகனங்களை நிறுத்தி சென்றனர். சிலர் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சிக்னல் பகுதியில் எங்கோ நின்ற சட்டம்-ஒழுங்கு போலீஸ்காரர் அங்கு விரைந்து வந்தார்.
அவர் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவழியாக அந்த நபர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். தொடர்ந்து போலீஸ்காரர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.