மணக்குள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரம் லட்டு பிரசாதமாக வினியோகிக்கப்பட்டது.;
புதுச்சேரி
குள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரம் லட்டு பிரசாதமாக வினியோகிக்கப்பட்டது.
உற்சாக கொண்டாட்டம்
2022-ம் ஆண்டு நிறைவுபெற்று நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு பிறந்தது. இந்த புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்திருந்தனர். அவர்கள் கடற்கரை, பாண்டி மெரினா பீச், நோணாங்குப்பம் பாரடைஸ் பீச் மற்றும் தங்கும் விடுதிகளில் நேற்று இரவு நள்ளிரவில் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
மேலும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பப்' நடன மதுபார்கலும் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பு
புதுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் மணக்குள விநாயகர் கோவில். வெளியூர் பக்தர்கள் அதிகமாக விரும்பி வழிபடுவது இந்த கோவிலைத்தான்.இன்று ஆண்டின் முதல் நாள் என்பதால் பெரும்பாலானவர்கள் அதிகாலையிலேயே மணக்குள விநாயகரை தரிசனம் செய்ய திரண்டு வந்தனர். அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதன்பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.மணக்குள விநாயகர் தங்கக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேரு வீதியில் 3 அடுக்காக நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் மணக்குள விநாயகரை தரிசித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்ததால் நேற்று கோவிலில் அர்ச்சனைகள் செய்வது ரத்து செய்யப்பட்டது.
லட்டு பிரசாதம்
உள்ளூர், வெளியூர் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மணக்குள விநாயகரை தரிசித்தனர். அவர்களுக்கு இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்பட்டன.
இதேபோல் புதுவையில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ரெயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், முத்தியால்பேட்டை ராம கிருஷ்ணாநகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவில், முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில், முதலியார் பேட்டை வன்னியபெருமாள் கோவில, வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கெங்கவராகர் நதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.