காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
அரசு வேலைக்கு பணி ஆணை வந்தும் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
காரைக்கால்
அரசு வேலைக்கு பணி ஆணை வந்தும் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரசு பணிக்கு ஆணை
காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்தவர் உப்பிலி (வயது 34). அவரது மனைவி மணிமேகலை. இவர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிரிஷா (12), பிரிதிஷா (8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் உப்பிலி தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். உப்பிலியின் தந்தை பக்கிரிசாமி, தஞ்சாவூர் முருகன்குடி அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் போது இறந்ததால் வாரிசு அடிப்படையில் அவரது பணி, உப்பிலிக்கு வழங்க அரசாணை தயாராக இருப்பதாக சென்னை சுகாதாரத்துறை இயக்குனரக அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதன்பேரில் கடந்த 22-ந் தேதி உப்பிலி குடும்பத்துடன் சென்னைக்கு சென்று பணி ஆணையை வாங்கி வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
தொடர்ந்து 24-ந் தேதி மருத்துவசான்றிதழ் வாங்க உப்பிலியை மணிமேகலை தஞ்சாவூருக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். ஆனால், உப்பிலி தஞ்சாவூர் செல்லாமல் மது குடித்துவிட்டு வந்து மணிமேகலையிடம் தகராறு செய்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மணிமேகலை வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த உப்பிலி ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய மணிமேகலை தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியுடன் தகராறு
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் கண்ணாப்பூர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண்ணுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அம்பகரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.