பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்போம்

புதுவையில் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுத்தால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும் என சபாநாயகர் செல்வம் கூறினார்.

Update: 2023-05-31 17:43 GMT

புதுச்சேரி

பாரம்பரிய உணவுகளை மீட்டெடுத்தால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும் என சபாநாயகர் செல்வம் கூறினார்.

கருத்தரங்கம்

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சி துறையின் ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் இந்திய யூனியன் பிரதேசங்கள், மாநிலங்கள் பங்கேற்கும் உணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சார்ந்த 2 நாள் கருத்தரங்கம் சன்வே ஓட்டலில் தொடங்கியது.

இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு அமைச்சர் சாய்.சரவணன்குமார் தலைமை தாங்கினார். கருத்தரங்கை தொடங்கி வைத்து சபாநாயகர் செல்வம் பேசியதாவது:-

சத்தான உணவு

தற்போது சூழ்நிலை காரணமாக உணவு வகைகள் மாற்றப்பட்டு வருகிறது. நாம் சத்தான உணவை உட்கொண்டால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும். நாம் கண்டுபிடித்த உணவுகளை அயல்நாட்டினர் தற்போது உண்கின்றனர். அவர்கள் கண்டுபிடித்த உணவை நாம் சாப்பிடுகிறோம். அதை பலர் நாகரீகமாக கருதுகின்றனர். நமது பாரம்பரிய உணவுகளை மறந்து போய்விட்டோம். இதனால் தான் தற்போது பிறக்கும் குழந்தைகள் கூட நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கிராம பகுதிகளில் இன்னும் பலர் 90 வயதை கடந்தாலும் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால் நகர பகுதிகளில் 50 வயதை தாண்டினாலே பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு தான். இது போன்ற கருத்தரங்கு மூலம் பாரம்பரிய உணவை மீட்டெடுத்தால் தான் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சம்பத் எம்.எல்.ஏ., மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சக துணை செயலாளர் நிவேதிதா, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி மற்றும் பல்வேறு மாநில அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

தொடர்ந்து சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், 'புதுவை மாநிலத்தில் அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 6-ந் தேதி தலைமை செயலகத்தில் நடக்கிறது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்