நவீன மீன் அங்காடிக்கு செல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை

நவீன மீன் அங்காடிக்கு செல்லா விட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Update: 2023-08-18 17:19 GMT

புதுச்சேரி

நவீன மீன் அங்காடிக்கு செல்லா விட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

புதுவை பெரிய மார்க்கெட் அருகே காந்தி வீதியில் மீன்களை கொட்டி மொத்த ஏலத்தில் மீன் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மொத்த மீன் விற்பனைக்கு தடை விதித்து கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சாலையில் மீன்களை கொட்டி ஏலம்விட தடை விதிக்கும் கலெக்டரின் உத்தரவினை அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது. இருந்த போதிலும் தொடர்ந்து மீன் ஏலம் அதே சாலையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

எச்சரிக்கை

இந்த மீன் விற்பனையை தடுக்காவிட்டால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு எச்சரித்தது. இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் தீர்ப்பினை அமல்படுத்துவது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா. சைதன்யா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், சுவாதிசிங், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர்.

2 வாரம் அவகாசம்

அப்போது ஐகோர்ட்டின் உத்தரவு குறித்து மீனவர்களிடம் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள். எனவே அரசின் உத்தரவுப்படி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு சென்று மீன் விற்பனையை நடத்திட வேண்டும். அதை இன்னும் 2 வார காலத்துக்குள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இல்லாவிட்டால் ஐகோர்ட்டு உத்தரவின்படி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்