இந்தியன் வங்கியில் டிஜிட்டல் யூனிட் தொடக்கம்
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியன் வங்கியில் டிஜிட்டல் யூனிட் தொடக்கம்
காரைக்கால்
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக்காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் இந்தியன் வங்கி கிளையில் டிஜிட்டல் யூனிட் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி, டிஜிட்டல் யூனிட்டை தொடங்கி வைத்தார். இதில் ரிச்சர்ட் ஜான்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், இந்தியன் வங்கி செயல் இயக்குனர் அஸ்வனிகுமார், கள பொது மேலாளர் ராஜேஷ்வர் ரெட்டி, பொதுமேலாளர் பாரதி மற்றும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
டிஜிட்டல் யூனிட் மூலம் சேமிப்பு கணக்கு, டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், பாஸ் புத்தகம் பதிவு செய்தல், பணத்தை மாற்றுதல், வைப்பு நிதிகளில் முதலீடு செய்தல், கடன் பெற விண்ணப்பித்தல், வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதமான டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.