காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணி டிசம்பரில் தொடங்கும்

காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணி டிசம்பர் மாதத்துக்குள் தொடங்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

Update: 2023-09-30 17:32 GMT

புதுச்சேரி

காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணி டிசம்பர் மாதத்துக்குள் தொடங்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

காரைக்கால் மீனவர்கள்

காரைக்கால் மாவட்ட அனைத்து மீனவ பஞ்சாயத்துகளை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவேண்டும், முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், மீனவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகளுக்கு திட்ட மதிப்பீடு ரூ.70 கோடியில் பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் அனுமதிபெற்று வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணி தொடங்கப்படும் என்று உறுதியளித்தார்.

அரசலாறு

மேலும் காரைக்கால் அரசலாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு அந்த பணியும் நவம்பர் மாதத்திற்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோல் மீனவ சமுதாயத்தினரை பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு மாற்ற ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அவருக்கு காரைக்கால் மீனவ பஞ்சாயத்தார்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், சமூக நலத்துறை இயக்குனர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்