காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் கோலாகலமாக தொடங்கியது.;

Update:2023-06-30 21:15 IST

காரைக்கால்

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் கோலாகலமாக தொடங்கியது.

காரைக்கால் அம்மையார்

சிவபெருமான் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். அதுமட்டுமின்றி 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர் காரைக்கால் அம்மையார் மட்டுமே. இத்தகைய பெருமைவாய்ந்த காரைக்கால் அம்மையார் வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. அதுசமயம் காரைக்கால் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, பரமதத்த செட்டியார் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு, ஸ்ரீ புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு வரும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபம் வரும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், வீட்டுமாடி, வாசல்களிலிருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து மாலை காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும் பிச்சாண்டவரை அம்மையார் எதிர்கொண்டு வரவேற்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

-----

Tags:    

மேலும் செய்திகள்