ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்புவனை அருகே செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
திருபுவனை
செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தாய் கண்டிப்பு
திருவண்டார்கோவில் புதுவை- விழுப்புரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி தனசெல்வி. இவர்களுடைய மகன் தரணிதரன் (வயது 17). இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு நெட்டப்பாக்கத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படிக்க விண்ணப்பித்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் இருந்த தரணிதரன், எப்போதும் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் கடந்த 2 நாட்களுக்கு முன் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் செல்போனை தரையில் வீசி உடைத்தார். பின்னர் மகனை தனசெல்வி சமாதானப்படுத்தினார்.
வீட்டுக்குள் வைத்து...
நேற்று காலை தனசெல்வியும், அவரது மகளும் தரணிதரனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலையில் தனசெல்வி வீடு திரும்பியபோது, தரணிதரன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனசெல்வி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தரணிதரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு தனசெல்வி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து தனசெல்வி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் தரணிதரன் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.