மாநில வருவாய் ரூ.3 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

புதுவை மாநில வருவாய் ரூ.3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2023-07-31 18:14 GMT

புதுச்சேரி

மாநில வருவாய் ரூ.3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மக்கள் நல திட்டங்கள்

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில் முதல்-அமைச்சரின் 4 புதிய மக்கள் நலத்திட்டங்களின் தொடக்க விழா (முதல்-அமைச்சரின் விபத்து காப்பீடு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300, ரூ.150 மானியம்) இன்று மாலை கம்பன் கலையரங்கில் நடந்தது.

விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் 4 புதிய மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெண் குழந்தைகள்

பெண்களுக்கான எந்த திட்டம் என்றாலும் புதுச்சேரியில் மிகச் சிறப்பாக, மற்ற மாநிலங்களை விட விரைவாக செயல்படுத்தப்படுகிறது என்பதை இந்த அரசு நிரூபித்துள்ளது. மற்ற மாநிலங்களில் அறிவித்த திட்டங்கள் இன்னும் மக்களுக்கு சென்று சேரவில்லை. அது மட்டுமல்லாமல், அறிவித்ததை விட குறைவான பேருக்கு மட்டுமே கொடுக்கின்றனர். ஆனால் புதுவை அரசு குறைவான பேருக்கு அறிவித்து விட்டு அதிகம் பேருக்கு செயல்படுத்தி வருகிறது.

பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதல்-அமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

ரூ.3 ஆயிரம் கோடி

பல மாநிலங்களில் சமையல் எரிவாயு மானியம் ரூ.100 தருகிறோம் என்று அறிவித்தார்கள். ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. புதுவையில் அறிவிக்காத திட்டத்தை செயல்படுத்தும் விதமாக சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் ரூ.300 வழங்கப்பட்டுள்ளது.

மத்திய-மாநில அரசுகள் இணைந்தால் புதுச்சேரி வளர்ச்சி பெறும் என்பதற்கு 'புதுச்சேரி மாடல்' முன் உதாரணமாக இருக்கிறது.

பிரதமர் மோடி 'பெஸ்ட் புதுச்சேரி' என்று சொன்னார். ஆனால் நான் 'பாஸ்ட் புதுச்சேரியாக' மாற்ற வேண்டும் என்று நான் அதிகாரிகளிடம் கூறுவேன். எல்லா திட்டங்களையும் விரைவாக கொண்டுவர வேண்டும். எல்லா கோப்புகளும் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசு புதுவைக்கு ரூ.1,400 கோடி வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி.வரி வருவாய் 60 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. கலால்துறை வருவாய் ரூ.800 கோடியில் இருந்து ரூ.1400 கோடியாக அதிகரித்துள்ளது. புதுவை மாநில வருவாயை ரூ.3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளோம்.

உறுதுணையாக இருப்பேன்

அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், சமூக நலத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் குமரன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்து மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்