மளிகை சாமான்களின் விலை உயர்வு
தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் புதுவையில் மளிகை சாமான்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புதுச்சேரி
தமிழகத்தில் ஈரோடு, சேலம், தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் புதுச்சேரிக்கு மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது வரத்து குறைவால் புதுச்சேரியில் மளிகை, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். மளிகை சாமான்களின் விலை கடந்த 2 மாதங்களில் படிப்படியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் துவரம் பருப்பு, மிளகாய், சீரகம் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசை கட்டும் நிலையில் மளிகை சாமான்களின் விலை உயர்வால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.
புதுச்சேரியில் மளிகை பொருட்களின் விலை விவரம் (கடந்த மாதம் இறுதியில் உள்ள விலை அடைப்பு குறிக்குள்) வருமாறு:-
மிளகு ரூ.110 உயர்வு
துவரம் பருப்பு- ரூ.190 முதல் ரூ.202 வரை (ரூ.170), சிறுபருப்பு- ரூ.135 (ரூ.130), பச்சை பயிர்- ரூ.143 (ரூ.140) குண்டு உளுந்து ரூ.140 (ரூ.130), கொண்டைக்கடலை- ரூ.138 (ரூ.130), கடலை பருப்பு- ரூ.104 (ரூ.90), பொட்டுக் கடலை- ரூ.122 (ரூ.110), சீரகம் ரூ.760 (ரூ.700), சோம்பு -ரூ.280 (ரூ.298), கடுகு-ரூ.98 (ரூ.98), மிளகு- ரூ.900 (ரூ.790), ரவை ரூ.79.50. (ரூ.78) மைதா 84. (ரூ.80) வெல்லம் ரூ.90 (ரூ.78), கோதுமை ரூ.50. (ரூ.48), நாட்டு சர்க்கரை ரூ.114. (ரூ.110) நீட்டு மிளகாய் ரூ.375 (ரூ.360), சர்க்கரை ரூ.44 (ரூ.44), ஏலக்காய் ரூ.2,900 (ரூ.3,400), பச்சை பட்டாணி ரூ.90. (ரூ.90), பூண்டு- ரூ.100 முதல் ரூ.232 வரை (ரகத்துக்கு ஏற்ப), முந்திரி- ரூ.800 (ரூ.800), திராட்சை ரூ.240, (ரூ.240), பாதாம்பருப்பு ரூ.700 (ரூ.700) என விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய்
எண்ணெய் வகைகளின் விலை கடந்த சில நாட்களில் சற்று குறைந்துள்ளது. தற்போது பாமாயில் 1 லிட்டர்-ரூ.90, சன் பிளவர்- ரூ.110, கடலை எண்ணெய் ரூ.180 முதல் ரூ.250 வரை, தேங்காய் எண்ணெய் ரூ.190 முதல் ரூ.222, நல்லெண்ணெய் ரூ.290 முதல் ரூ.330 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பெரியமார்க்கெட்டில் கடை நடத்தி வரும் கடை உரிமையாளர் ஒருவரிடம் கேட்ட போது, 'மளிகை மற்றும் எண்ணெய் விலையில் கடந்த சில நாட்களாக சற்று, ஏற்ற இறக்கம் உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது' என்றார்.
சாம்பார் வெங்காயம்
புதுச்சேரிக்கு கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு சில காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் விலை 2 மடங்காக உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது. இதே போல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகள் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.