மத்தியில் ஆட்சி மாறினால் புதுவைக்கு மாநில அந்தஸ்து

2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நாராயணசாமி கூறினார்.

Update: 2023-08-17 16:49 GMT

புதுச்சேரி

2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நாராயணசாமி கூறினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாறு மாறாது

டெல்லி நேரு அருங்காட்சியகத்தின் பெயரை மத்திய அரசு மாற்றி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு பெயர்களை மாற்றுவதையும், சரித்திரத்தை மாற்றியமைக்கும் வேலையையும் செய்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இப்படி செய்வதன் மூலம் வரலாறு மாறி விடாது.

தமிழகத்தில் நீட் தேர்வால் தற்கொலைகள் தொடர்கிறது. தமிழக கவர்னரும் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அதிகாரம் தன்னிடம் இருந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இருவரும் மாணவர் நலனுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்து அரசியல் பேசுகிறார்கள்.

மாநில அந்தஸ்து

கவர்னர் ஒவ்வொரு விஷயத்திலும் கருத்து வெளியிட வேண்டும் என்றால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கருத்து சொல்லலாம். கவர்னர் பதவியில் இருந்துகொண்டு அரசியல் செய்யக் கூடாது.

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனக்கு பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் மாநில அந்தஸ்து பற்றி பேசுகிறார். 2016-ல் தனிக்கட்சி தொடங்கும்போதும், 2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவும் மாநில அந்தஸ்து பற்றி பேசினார். ஆனால் அவர் தலைகீழாக நின்றாலும் மாநில அந்தஸ்து பெறமுடியாது.

4 திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்த முடியாத நிலையில் அதிகாரிகளை குறைகூறுகிறார். திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்காமல் அதிகாரிகளை குறைகூறி என்ன பயன்? 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-

புதிய வணிக வளாகம்

மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பெண்ணான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டிக்கவில்லை. புதுவை மின்துறை தனியார் மயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? ஊழியர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்வதை தெலுங்கானா, புதுச்சேரி மக்கள் கேட்பதில்லை. அவரது தந்தை கூட அவரது கருத்தை கேட்பதில்லை. தேர்தலில் நிற்பதுதான் அவரது கொள்கையாக உள்ளது.

இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு நாளை மறுநாள் பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்