ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-11-07 16:38 GMT

புதுச்சேரி

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் ரம்மியில் ஆர்வம்

திருக்கனூரை அடுத்த சோம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 29). நகரப் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இதற்காக மிலாது வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் 3-வது மாடியில் சக ஊழியர்களுடன் தங்கி இருந்தார்.

வாரம் ஒருமுறை வீட்டுக்கு சென்று மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு திரும்புவதை வழக்கமாக வைத்து இருந்தார். இந்தநிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அய்யனார் ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக அதிக அளவில் இந்த விளையாட்டில் பணம் இழந்ததாக தெரிகிறது.

குடும்பத்துக்கு தெரியாமல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டி லட்சக்கணக்கில் அய்யனார் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

தூக்கு போட்டு தற்கொலை

கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்க ஆன்-லைன் செயலி மூலமாகவும் கடன் பெற்றுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில் அய்யனார் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் சக ஊழியர்கள் இல்லாத நேரத்தில் மிலாது வீதியில் தங்கியிருந்த அறையில் நேற்று அய்யனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சுரேஷ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தினருக்கு ஆடியோ பதிவு

தொடர்ந்து அய்யனாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அய்யனார் தற்கொலைக்கு முன்பாக தனது செல்போனில் ஒரு ஆடியோவை பதிவிட்டது தெரியவந்தது. அதில், தனது குடும்பத்தினருக்கு உருக்கமாக ஆடியோ பதிவிட்டு இருந்தார். அதில் 'சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று தன் கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காததால் மீண்டும் இந்தியா திரும்பி வந்து விட்டேன். தற்போது ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்து விட்டேன். சிறு தொகை கிடைத்தாலும் ஆன்லைன் விளையாட்டில் தான் மனம் போகிறது. என்னை மன்னித்து விடுங்கள்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணம் இழந்ததுடன் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்