கனரக வாகனங்களை தடை செய்ய வேண்டும்

திருக்கனூர் வணிகர் வீதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-08-05 16:54 GMT

திருக்கனூர்

திருக்கனூர் வணிகர் வீதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

போக்குவரத்து நெரிசல்

திருக்கனூர் கடைவீதியில் இருந்து மண்ணாடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், மதகடிப்பட்டு பகுதிகளுக்கு செல்வதற்கு வணிகர் வீதி சாலை மற்றும் திருக்கனூர் ஏரிக்கரை பைபாஸ் சாலை ஆகிய வழித்தடங்கள் உள்ளன.

இதில் பெரும்பாலான வாகனங்கள் வணிகர் வீதியையே அதிகம் பயன்படுத்துகின்றன. கடைகள் அதிகமுள்ள இந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக பஸ், டிப்பர் லாரிகள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துவதால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காய் மீது போடப்பட்டிருந்த சிலாப் சேதமடைந்து பள்ளமாக மாறியது.

இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் கால்வாய் மீது புதிதாக சிலாப் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஒரு வாரமாக வணிகர் வீதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஏரிக்கரை பைபாஸ் சாலை வழியாக செல்கின்றன.

கனரக வாகனங்களுக்கு தடை

இந்தநிலையில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் மீண்டும் வணிகர் வீதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வணிகர் வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் சிலாப்பால் கனரக வாகனங்களால் பாதிக்கப்படாமல் இருக்கவும் திருக்கனூர் வணிகர் வீதி வழியாக மோட்டார் சைக்கிள், கார், உள்ளிட்ட வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மாறாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து திருக்கனூர் போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்