புதுச்சேரி
ரோடியர் மில்லில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடப்பதால் புதுவை-கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசாருடன் ரசிகர்கள் தள்ளுமுள்ளு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
'லால் சலாம்' படம்
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படம் பல்வேறு நகரங்களில் உருவாகி வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுவை நகரில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. அதன்படி புதுவை- கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில்லில் கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று 3-வது நாளாக ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
தள்ளு முள்ளு
இதையொட்டி இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் ரோடியர் மில்லின் முன்பு பகுதியில் திரண்டனர். சாலையின் இருபுறமும் ரசிகர்கள் திரண்டு நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.
மாலை 6.45 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தார். அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் முண்டியடித்து சென்றனர். இதனால் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காரில் நின்று கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன்பின்னரே அங்கு போக்குவரத்து சீரானது.