தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-10-15 16:05 GMT

முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மகளிர் கல்லூரி முன் அவலம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்திவீதியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முன்பு உள்ள கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அந்த பகுதிகளில் சாலையோர கடைகளின் கழிவுகளை சிலர் இந்த வாய்க்காலில் கொட்டி வருகின்றனர். இதனால் கழிவுநீர் தங்கு தடையில்லாமல் செல்ல வழியின்றி தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. இந்த வாய்க்கால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதி மக்களுக்கு கொசுக்களால் ஏற்படும் நோய் பரவும் அபாயம் உள்ளது. கல்லூரிக்கு பஸ்களில் வரும் மாணவிகள் கல்லூரிகளில் முன்பு நின்று தான் பஸ் ஏறுகின்றனர். வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் மாணவிகள் முகத்தை மூடியபடி நின்றே பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை உள்ளது.

அரசு பொது மருத்துவமனை

ஒயிட் டவுன் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயில் பகுதியில் ஓட்டல்கள், கடைகள் உள்ளன. அந்த கடைகளின் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கி இருக்கும் உறவினர்கள் சிலர் இந்த பகுதிகளில் உள்ள ஓட்டல்களில்தான் சாப்பிடுகின்றனர். எனவே இங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுவையில் தற்போது கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகம் பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அரசு பொதுமருத்துமவனையின் முன்பே கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தூர்வார வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை முன்பு உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை விரைவில் தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்