வீட்டிற்குள் பூட்டி வைத்து இளம்பெண் பலாத்காரம்?
ஆட்டோ டிரைவரின் சில்மிஷத்தில் இருந்து தப்பிய இளம்பெண்ணை, திருமண ஆசைவார்த்தைகூறி வீட்டிற்குள் பூட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
புதுச்சேரி
ஆட்டோ டிரைவரின் சில்மிஷத்தில் இருந்து தப்பிய இளம்பெண்ணை, திருமண ஆசைவார்த்தைகூறி வீட்டிற்குள் பூட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணிடம் சில்மிஷம்
புதுச்சேரி திப்புராயப்பேட் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 29-ந்தேதி இரவு குடும்பத்தாரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவர் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவரிடம் தன்னை பஸ் நிலையத்தில் கொண்டு விடும்படி சொன்னார். அப்போது அவர் தன்னிடம் பணமில்லை என்பதையும் ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார். பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுபோல, சரிம்மா.. ஏறு எனக்கூறி ஆட்டோவில் அழைத்து சென்றார்.
முதலியார்பேட்டை அனிதாநகர் பகுதிக்கு சென்றதும் ஆட்டோவை நிறுத்தி விட்டு, அப்பெண்ணிடம் டிரைவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் கூச்சலிட்டார். உடனே ஆட்டோவை எடுத்துக்கொண்டு டிரைவர் மின்னல் வேகத்தில் மறைந்தார்.
பாலியல் தொல்லை
அனிதா நகர் பகுதியில் தன்னந்தனியாக நின்றுக்கொண்டிருந்த அப்பெண்னிடம் அங்கிருந்த சில வாலிபர்கள் நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். அவர்களில், இளம்பெண்ணின் அழகில் மயங்கிய ஒரு வாலிபர், உன்னை எனக்கு பிடித்துள்ளது என்றும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.
இதனை உண்மையென நம்பிய அந்த பெண், அந்த வாலிபர் மற்றும் அவரின் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றார். அங்கு அந்த பெண்ணை வீட்டிற்குள் அடைத்து அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
போலீசார் மீட்பு
இதற்கிடையே அந்த இளம்பெண் நேற்று பகலில் அந்த வீட்டில் இருந்து தப்பினார். பின்னர் அப்பகுதியில் உள்ள கடைக்காரரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தார். கடைக்காரர் முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டனர்.
அதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
3 பேர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது.
அதன்படி புதுவை கொம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாதிக்பாட்ஷா (வயது40), லாஸ்பேட்டை தினேஷ் (28), அரவிந்த் (25) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பலாத்காரமா?
தனியாக வந்த பெண் 2 நாட்கள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.