ஜிப்மரில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு

ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு புகார் எதிரொலியாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-09-22 17:58 GMT

புதுச்சேரி

ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு புகார் எதிரொலியாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திடீர் ஆய்வு

ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை ஜிப்மரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்.சரவணன்குமார் மற்றும் தலைமைச் செயலர் ராஜூவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், கவர்னர் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்.

இலவச சிகிச்சை

ஆய்வின்போது ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு, உள்புற மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வழிமுறைகள், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மக்கள் தொடர்பு அதிகாரியை நியமித்தல், விசாரணை மையங்களை ஏற்படுத்துதல், நோயாளிகளுக்கான மருந்தக வசதிகளை ஏற்படுத்துதல், நோயாளிகள் உறவினர்கள் தங்குவதற்கான இடங்களை மேம்படுத்துதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அவசர கூட்டம்

கூட்டம் முடிந்தவுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக அவசர கூட்டம் கூட்டப்பட்டது. ஜிப்மரில் கடந்த ஆண்டு 2,47,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1,70,000 பேரும், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 60,000 பேரும், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 10,000 பேரும் ஆவார்கள்.

அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக தரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றாலும் அவர்களுக்கும் முழுமையான இலவச சிகிச்சை, மருந்து தரப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய கேட்டுக்கொண்டோம். மருந்துகள் இல்லை என்று வெளியே மருந்து சீட்டு தரக்கூடாது என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.

மருத்துவ உபகரணம்

புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு இந்த மருத்துவமனையில் பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த மாதம் மட்டும் 150 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புதுவையை சேர்ந்தவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஜிப்மருக்கு ரூ.40 கோடி செலவில் மருத்துவ உபகரணம் வாங்கப்பட்டுள்ளது. மருந்துகள் எல்லாம் தயார் செய்து இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு இல்லை. சில மருந்துகள் இல்லாதததால் மருந்து சீட்டு கொடுத்தோம் என்று கூறுகிறார்கள். டெண்டர் நடைமுறையில் சிறிது சிக்கல் இருந்ததாகவும் அதனால் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறி இருக்கிறார்கள். அதையெல்லாம் உடனே சரி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்தகங்களுக்கும், உள்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நோயாளிகள் மற்றும் அவர்களிடம் உறவினர்களிடம் சிகிச்சை தரம் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்