அரசுப் பள்ளி மாணவர்கள் மீண்டும் போராட்டம்
வில்லியனூரில் ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனூர்
ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தொடக்கப்பள்ளி
வில்லியனூரை அடுத்த அகரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை அனிதா கடந்த மாதம் முத்தியால்பேட்டை அரசு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆசிரியை அனிதாவை இடமாற்றம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். இதுபற்றி வில்லியனூர் கல்வித்துறையின் வட்டம்-5 அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
மீண்டும் போராட்டம்
அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் ஆசிரியை அனிதா, அகரம் பள்ளிக்கு மீண்டும் வரவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்களுடன் பள்ளியின் நுழைவுவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.
இது குறித்து பெற்றோர் கூறுகையில், ஆசிரியை அனிதா மீண்டும் இங்கு பணியமர்த்தப்படாவிட்டால், எங்கள் பிள்ளைகளின் மாற்றுச்சான்றிதழை (டி.சி.) வாங்கி சென்றுவிடுவோம் என்று தெரிவித்தனர். ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.