விநாயகர் சிலைகள் கால்நடைகளால் சேதம்

காரைக்காலில் விநாயகர் சதுர்த்திக்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கால்நடைகளால் சேதமடைந்து வருகின்றன.

Update: 2023-07-30 17:06 GMT

கோட்டுச்சேரி

காரைக்காலில் விநாயகர் சதுர்த்திக்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கால்நடைகளால் சேதமடைந்து வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி

காரைக்காலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று மாவட்டம் முழுவதிலும் வைத்து வழிபாடு செய்யப்படும் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். களிமண் சிலைகள், காகிதச் சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருளால் தயாரிக்கப்பட்ட சிலைகள் ஊர்வலத்தில் இடம் பெற்று வருகின்றன.

இந்த சிலைகள் கோவில் மற்றும் முக்கிய சந்திப்புகளில் காட்சிக்காக வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டபின், தாரை, தப்பட்டை, வாண வேடிக்கை, ஆட்டம், பாட்டத்துடன் கடலில் கரைக்கப்படுகின்றன. இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வு எனினும், இவ்வருடம் மேலும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சிலைகள் தயாரிப்பு

இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கும்பகோணம் பகுதியில் இருந்து சிலைகள் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்களால் வருகிற செப்டம்பர் மாதம் நடக்க உள்ள விநாயகர் சதுர்த்திக்காக காரைக்கால் பைபாஸ் சாலையில் சிலை தயாரிப்பு கூடம் நிறுவப்பட்டது.

வெட்ட வெளியில் கூடாரம் அமைத்து ரப்பரிலான வார்ப்பு அச்சில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், தேங்காய் நார் கொண்டு சிலைகளை செய்தனர். செப்டம்பர் 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இச்சிலைகளை வண்ணம் பூசி விற்கவும் திட்டமிட்டு இருந்தனர்.

கால்நடைகளால் சேதம்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை இந்த சிலைகளை செய்த வட மாநில தொழிலாளர்கள் அப்படியே விட்டு சென்று விட்டனர். அவர்கள் அமைத்திருந்த கூடாரமும் காலியானது. அதனால், இச்சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் வெட்ட வெளியில் உள்ளன.

காரைக்கால் பைபாஸ் சாலை அமைந்துள்ள கீழ்வெளி பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் சிலைகளை உரசிச்செல்வதும், முட்டி சாய்த்தும் விடுகின்றன. பாதுகாப்பற்ற நிலையில் வெட்ட வெளியில் இருக்கிற இந்த சிலைகளை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்