முழு கொள்ளளவை எட்டியது, பாகூர் ஏரி

தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாகூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மழைக்காலத்துக்குள் வாய்க்கால்களை தூர்வார எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-08 16:29 GMT

பாகூர்

தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாகூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மழைக்காலத்துக்குள் வாய்க்கால்களை தூர்வார எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன மழை

கர்நாடகம், தமிழக பகுதியில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

புதுச்சேரியில் சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரி, கரையாம்புத்தூர், மணமேடு ஏரிகளுக்கும், சித்தேரி அணைக்கட்டில் இருந்து குருவிநத்தம், பரிக்கல்பட்டு உள்ளிட்ட ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி வருகின்றனர்.

இந்தநிலையில் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கொள்ளளவை எட்டியது

தொடர்ந்து சொர்ணாவூர் அணையில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தநிலையில் நேற்று முன்தினம் பாகூர் ஏரி 3 மீட்டரை தொட்டு, முழு கொள்ளளவை எட்டியது.

இதனையடுத்து அதிகபட்ச கொள்ளளவான 3.6 மீட்டர் உயரத்திற்கு தண்ணீரை சேமிக்கும் வகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி, அரங்கனூர் கலிங்கள் பகுதியில் 20 செ.மீ., உயரம் கொண்ட 3 தடுப்பு கட்டைகள் போடும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள ஏடிமுடி அய்யனார் கோவிலிலும், கலிங்களில் உள்ள பங்காரி, சிங்காரி சிலைகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது.

இதில் எம்.எல்.ஏக்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் கலந்து கொண்டு தடுப்பு கட்டை போடும் பணியை தொடங்கி வைத்தனர்.

பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மணிமாறன், இளநிலை பொறியாளர் மனோகர், வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

15 கிராமங்களுக்கு பாசன வசதி

புதுச்சேரியின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி உள்ளது. 3.6 மீட்டர் உயரமுள்ள இந்த ஏரியின் கொள்ளளவு 194 மில்லியன் கனஅடி. பருவமழை காலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம்.

இந்த ஏரி மூலம் பாகூர், சேலியமேடு, குடியிருப்புபாளையம், அரங்கனூர், குருவிநத்தம் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

பருவ மழைக்கு முன்னதாக நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், பருவ மழை காலங்களில் குடியிருப்பு பகுதியிலும், விளை நிலங்களிலும் மழைநீர் புகாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

பாகூர் ஏரியில் தற்போது நிரம்பி உள்ள தண்ணீரை பயன்படுத்தி சுமார் 4 மாதங்களுக்கு விவசாய பணிகளை செய்ய முடியும். ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பொதுப்பணித் துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்