ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது

புதுவை அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2023-04-29 18:01 GMT

புதுச்சேரி

ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழர் துரோகி அண்ணாமலை

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் திங்கட்கிழமை முதல் வருகிற 5-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். பிரதமர் மோடி காங்கிரசை தொடர்ந்து விமர்சித்து பேசி வருகிறார். ஆனால் அதானி சம்பந்தமான காங்கிரஸ் கட்சியின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வதில்லை.

காரைக்கால் துறைமுகத்தை பினாமி பெயரில் அதானி நடத்தி வருகிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமியும் அதை கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துசெய்ய கூறினாலும் அவர் கவலைப்படவில்லை.

கர்நாடக மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்துள்ளனர். அந்த கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இருந்தும் அதை கண்டுகொள்ளவில்லை. தமிழர் துரோகியாக அண்ணாமலை செயல்படுகிறார்.

முஸ்லிம்களுக்கு சலுகை?

புதுவையில் வெள்ளிக்கிழமை பூஜைக்காக அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் 2 மணிநேரம் தாமதமாக வர கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சலுகை கொடுப்பதுபற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு செல்வார்கள். அவர்களுக்கு சலுகை வழங்கப்படுமா? ஒரு தரப்பினருக்கு சலுகை அறிவித்துவிட்டு மற்ற மதத்தினரை உதாசீனப்படுத்துவதை ஏற்க முடியாது.

ஒற்றுமை இல்லை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமுதசுரபி ஊழியர்கள் விஷம் குடிக்கும் துயர சம்பவம் நடந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு, அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்களை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு அரசின் செயல்பாடு உள்ளது.

ஸ்பின்கோ மில் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தினால்தான் காரியம் நடக்கும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. மக்கள்நல திட்டங்களை நிறைவேற்ற நிதியில்லை. ஆனால் சொகுசு கார்கள் வாங்கவும், சுற்றுலா செல்லவும் நிதியுள்ளது. இந்த ஆட்சியாளர்களிடையே ஒற்றுமையில்லை.

ஆன்லைன் சூதாட்டம்

தமிழகத்தில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போட்டார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியால் இப்போது சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

புதுவையில் இப்போது ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமி அதைப்பற்றி கவலைப்படாமல் மவுனம் காக்கிறார். அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க.வினர் தான் அதை நடத்துகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்