தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகூர்
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி அணையில் இருந்து 1,035 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.75 அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிவரை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதையொட்டி தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுவை கிராமங்களான மணமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம், கொமந்தான்மேடு, உச்சிமேடு மற்றும் மலட்டாறு கரையோரத்தில் அமைந்துள்ள நெட்டப்பாக்கம், பண்ட சோழநல்லூர், வடுகுப்பம், ஏம்பலம், நத்தமேடு, கம்பளிகாரன்குப்பம் ஆகிய பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்களது உடமைகளையும், கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம். இதை மீறுவோர் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
இதற்கிடையே பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.
தொடர்ந்து சொர்ணாவூர் அணைக்கட்டு, சித்தேரி அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டனர்.