நடுக்கடலில் மீன்வலை, செல்போன்கள் பறிப்பு
காரைக்கால் மீனவர்களை நடுக்கடலில் வழிமறித்து தாக்கி மீன்வலை, செல்போன்களை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
காரைக்கால்
காரைக்கால் மீனவர்களை நடுக்கடலில் வழிமறித்து தாக்கி மீன்வலை, செல்போன்களை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் மீனவர்கள்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தனசீலன் (வயது35). இவர், தனக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 13-ந் தேதி மாலை வழக்கம் போல் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார்.
அவருடன் மீனவர்கள் மாதேஷ், அய்யப்பன், மணிபாலன், அபிலாஷ், மணியன், சதீஷ் ஆகிய 6 பேரும் மீன் பிடிக்க சென்றனர். 14-ந் தேதி இரவு கோடியக்கரை தென் கிழக்கே கடலில் வலையை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
கடற்கொள்ளையர்களா?
அப்போது அங்கு திடீரென 4 படகுகளில் வந்த மர்ம நபர்கள் சுமார் 20 பேர், தனசேகரன் படகை மடக்கி நிறுத்தி, கையில் வைத்திருந்த இரும்பு பைப், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களை தாக்கினர். சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலில், காரைக்கால் மீனவர்கள் நிலைகுலைந்து போனார்கள். 20-க்கும் மேற்பட்டவர்கள் என்பதால், காரைக்கால் மீனவர் களால் எதிர்த்து தாக்க முடியவில்லை.
இந்தநிலையில் மீனவர்களின் பைபர் படகில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள், திசை காட்டும் கருவி, செல்போன்கள், மீன்வலைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். அவர்கள் கடல் கொள்ளையர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்த தாக்குதலில் காயமடைந்த 7 மீனவர்களும் இரவு முழுவதும் கடலில் பயணம் செய்து ஒருவழியாக இன்று அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகம் வந்து சேர்ந்தனர். சக மீனவர்கள் அவர்களை அழைத்துச் சென்று காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயமடைந்தவர்களில் பைபர் படகு உரிமையாளரான தனசீலன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடுக்கடலில் தாக்குதல் நடத்தி வலை, செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.