டிராக்டர் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலி

திருபுவனை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மொபட்டில் சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2023-09-19 22:01 IST
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலி

திருபுவனை

திருபுவனை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மொபட்டில் சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

மொபட்டில் வந்தார்

புதுவை மாநிலம் திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு கோகுல் நகரை சேர்ந்தவர் சண்முகம். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகள் கனிமொழி (வயது 19). இவர் அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இன்று காலை 8.30 மணி அளவில் மதகடிப்பட்டில் இருந்து பி.எஸ்.பாளையம் வழியாக கூனிச்சம்பட்டில் உள்ள தனது தோழியை பார்க்க மொபட்டில் சென்றார்.

பி.எஸ்.பாளையம் ஏரிக்கரை அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக கரும்பு லோடு இறக்கிவிட்டு ஒரு டிராக்டர் இரண்டு டிரெய்லருடன் வந்தது. சாலை வளைவில் திரும்பியபோது டிராக்டரின் பக்கவாட்டில் சென்ற மாணவி, டிராக்டரின் 2-வது டிரெய்லர் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் டிரெய்லர் சக்கரத்தில் அந்த மாணவி சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சாலைமறியல்

ஆனால் அவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.

இதற்கிடையில் மகள் விபத்தில் சிக்கியது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த சண்முகம், கனிமொழியை மீட்டு காரில் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி கனிமொழி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்