நிலுவை சம்பளம் கேட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெடுங்காடு
நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 மாத சம்பளம் நிலுவை
நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். 2023-24 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஊதியத்திற்கான நிதியை நெடுங்காடு கொம்யூனுக்கு வழங்க தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சருமான சந்திரபிரியங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். பொதுவான பணிநிலை அரசாணையை அமல்படுத்த வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் ராஜகோபால்ராஜா தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணை தலைவர்கள் அய்யப்பன், சுப்புராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். முடிவில் செயலாளர் நெப்போலியன் நன்றி கூறினார்.