செல்போன் செயலியை பயன்படுத்தி கடன் வாங்க வேண்டாம்

பணத் தேவைக்காக செல்போன் செயலியை பயன்படுத்தி கடன் வாங்க வேண்டாம் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-07 17:15 GMT

புதுச்சேரி

பணத் தேவைக்காக செல்போன் செயலியை பயன்படுத்தி கடன் வாங்க வேண்டாம் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

45 செல்போன்கள்

புதுவையில் பல்வேறு இடங்களில் திருட்டுபோன செல்போன்கள் தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அந்த செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி திருடப்பட்டு செல்போன்களை போலீசார் மீட்டு அதன் உரிமைாயளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சைபர் கிராம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணு, 45 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

33 வழக்குகள் பதிவு

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் சைபர் கிரைம் போலீஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மோசடி வழக்குகளில் ரூ.12 கோடியே 86 லட்சம் வங்கி கணக்குகளில் முடக்கப்பட்டுள்ளது.

750 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் தற்போது வருகிற முதலீடு, வேலைவாய்ப்பு, வரன் தேடுதல் போன்றவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது எதிர்தரப்பினர் ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் உண்மையானவர்கள் தானா ? என உறுதிபடுத்திய பின்னரே அவர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.

ஓ.டி.பி. எண்ணை பகிர வேண்டாம்

தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். அதனை நீங்கள் தொடர்பு கொண்டால் உங்கள் புகை படத்தை தவறாக சித்தரித்து உங்களை மிரட்டி பணம் பறிக்க நேரிடலாம். எந்த காரணம் கொண்டும் ஓ.டி.பி. எண்ணை மற்றவரிடம் பகிர வேண்டாம். அவசர தேவைக்காக செல்போன் கடன் செயலியை பயன்படுத்தி கடன் வாங்க வேண்டாம். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீசின் இலவச எண் 1930-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்