ஜனாதிபதியை சந்திக்க காங்., சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுப்பு

ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2023-08-08 16:50 GMT

புதுச்சேரி

ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.

புதுச்சேரி நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் தங்கி இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இந்தநிலையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஜனாதிபதியை சந்திக்க வந்தார். அவரை காத்திருப்பு அறையில் தங்க வைத்த அதிகாரிகள் பார்வையாளர்கள் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி ஜனாதிபதியை சந்திக்க அவருக்கு அனுமதி மறுத்தனர். இதனால் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஜனாதிபதியை சந்திக்க விரும்புகிறீர்களா? என அதிகாரிகள் கேட்டனர். நானும் அவரை சந்தித்து மாநில அந்தஸ்து, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மனு கொடுக்கலாம் என்று வந்தேன். ஆனால் நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்பதால் என்னை தவிர்த்து இருக்கலாம்' என்றார்.

சந்திக்கவில்லை

மாநில அந்தஸ்து கேட்பது தொடர்பாக நேரு எம்.எல்.ஏ. தலைமையில் 10 பேர் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டனர். அதன்படி நேரு எம்.எல்.ஏ.வுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை ரோமன் ரோலண்ட் வீதி, புஸ்சி வீதி சந்திப்புக்கு நேரு எம்.எல்.ஏ. வந்தார். அவருடன் சமூக அமைப்பு நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். போலீசார் நேரு எம்.எல்.ஏ.வை மட்டும் உள்ளே செல்லும்படி கூறினர். ஆனால் அவர் தன்னுடன் 2 பேரை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 30 நிமிடம் காத்திருந்த அவர் மனு கொடுக்காமலேயே அங்கிருந்து திரும்பிச் சென்றார். அப்போது அவருடன் சமூக அமைப்பு நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்