அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

பாகூர் பகுதியில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update:2022-05-27 19:42 IST

பாகூர்

பாகூர் பகுதியில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெல் நடவு

புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக பாகூர் விளங்குகிறது. இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது நவரை பருவ 2-ம் போக நெல் நடவு செய்யப்பட்டு, சுமார் 500 ஏக்கர் பரப்பளவு அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில் புதுவை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. இதில் பலஇடங்களில் மரங்கள் சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் விழுந்தன.

100 ஏக்கர் சேதம்

பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தரையில் சாய்ந்தன. தாழ்வான வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பாகூர், அரங்கனூர், சேலியமேடு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூர், கரிக்கலாம்பாக்கம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன.

இன்னும் சில நாட்களில் அறுவடை செய்துவிடலாம் என்று இருந்த விவசாயிகளுக்கு இந்த மழை நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஏக்கருக்கு 40 மூட்டை கிடைக்கவேண்டிய நெல் மூட்டைகள் தற்போது 30 மூட்டைகள் வரை மட்டுமே கிடைக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கான அறுவடை கூலி 2 மடங்கு இருக்கும் என்பதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

உளுந்து, வாழை மரம்

மேலும் பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த உளுந்து, பச்சை பயறு செடிகளும் மழையில் சேதமடைந்துள்ளன. ஒருசில இடங்களில் பல ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்