இணையதள குற்றங்களை தடுக்க சைபர் கிரைம் பிரிவு

காரைக்கால் மாவட்டத்தில் இணையதள குற்றங்களை தடுக்க, சைபர் கிரைம் பிரிவை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-20 17:00 GMT

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் இணையதள குற்றங்களை தடுக்க, சைபர் கிரைம் பிரிவை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார்.

சைபர் கிரைம் பிரிவு

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு குற்ற பிரிவுகள் இருந்தாலும், தற்போதுள்ள காலகட்டத்திற்கு ஏற்ப இணையதள வழியாக நடைபெறும் பல்வேறு குற்றங்களை தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளது போல், சைபர் கிரைம் பிரிவு கிடையாது. மாறாக, புதுச்சேரியில் உள்ள சைபர் கிரைம் பிரிவிற்கு புகார்கள் அனுப்பட்டு, அவர்களது ஆலோசனையின் பேரில் தான் வழக்குகள் பதியப்பட்டு விசாரனை நடைபெற்று வந்தது.

இதனால் வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டுவந்ததால், காரைக்கால் மாவட்டத்திலேயே சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

விரைவான நடவடிக்கை

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக சைபர் கிரைம் போலீஸ் பிரிவு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:-

காரைக்கால் சம்பந்தமான சைபர் கிரைம் வழக்குகளை இதுவரை புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது காரைக்காலில் தொடங்கப்பட்டுள்ள சைபர் கிரைம் பிரிவு மூலம், இனிமேல் நடைபெற கூடிய மோசடி சம்பவங்கள், வங்கி மோசடி, பாலியல் சம்பவங்கள் உள்ளிட்ட எல்லாவிதமான குற்றச் சம்பவங்கள் குறித்தும் இப்பிரிவின் மூலம் உடனுக்குடன் விசாரணை நடத்தப்படும்.

இணையவழி குற்றங்கள் குறித்து பள்ளி, கல்லூரிகளிலும், பொதுமக்களிடமும் வாரம் 2 முறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பாலியல் சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிப்போர் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும். குற்றங்களின் தன்மையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

எனவே பொதுமக்கள் இனி காரைக்காலில் உள்ள சைபர் கிரைம் பிரிவு தொலைபேசி எண் 9489205364-ல் தொடர்பு கொண்டோ அல்லது சைபர் கிரைம் பிரிவிற்கு நேரடியாகவோ வந்து புகார் தரலாம். இந்த பிரிவிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையில் போலீசார் மனமகிழன், தினேஷ்குமார், வினோத்குமார் ஆகியோர் செயல்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்