எனது செயல்பாடுகளை விமர்சனம் செய்வதா?
தனதுசெயல்பாடுகளை கவர்னர், முதல்-அமைச்சர் பாராட்டியுள்ளதாக குறிப்பிட்டதுடன் தனது துறை ரீதியாக செய்த சாதனைகளை பட்டியலிட்டு 9 பக்க கடிதத்தை சந்திரபிரியங்கா வெளியிட்டார்.
புதுச்சேரி
தனதுசெயல்பாடுகளை கவர்னர், முதல்-அமைச்சர் பாராட்டியுள்ளதாக குறிப்பிட்டதுடன் தனது துறை ரீதியாக செய்த சாதனைகளை பட்டியலிட்டு 9 பக்க கடிதத்தை சந்திரபிரியங்கா வெளியிட்டார்.
9 பக்க கடிதம்
முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் அமைச்சருக்கான பணியை சரிவர செய்யாததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவரை அதிருப்தியில் நீக்கம் செய்ததாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சந்திர பிரியங்கா இன்று 9 பக்கம் கொண்ட சாதனை பட்டியலை நேற்று வெளியிட்டார். அதில் அவர் வகித்த துறைகளில் நடந்த பணிகளை பட்டியலிட்டுள்ளார்.
விமர்சனம் செய்பவர்கள்...
இதனை தனது தொகுதியான நெடுங்காடு தொகுதி மக்களுக்கான கடிதம் போன்று வெளியிட்டுள்ளார். அதில் சந்திர பிரியங்கா குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
புதுவை அரசின் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் சார்ந்த நான் மேற்கொண்ட பணிகளில் சிலவற்றை பொதுமக்களின் பார்வைக்கும் அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்து வருபவர்களின் கவனத்துக்கும் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்.
கவர்னர் பாராட்டு
துறைகளில் மேம்பாட்டு பணிகள், சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் குறிப்பிடப்படாத பல வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள எனக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, அரசு அதிகாரிகள், அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த ஒய்-20 மாநாட்டில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று மேடையில் பாராட்டி பேசி சான்றளித்தார். அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்படும் சிறந்த துறைக்கான முதல்-அமைச்சரின் விருது தொழிலாளர் துறைக்கு அறிவிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் விருது
கடந்த சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் தனது கரங்களால் இந்த விருதினை எனது தொழிலாளர் துறைக்கு வழங்கியதன் மூலம் தொழிலாளர் துறையின் செயல்பாட்டிற்கு அங்கீகாரம் கிடைத்தது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த பண முடிப்பு மற்றும் மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ஜூன் 2021 முதல் பயனாளிகளுக்க ரூ.79 கோடி அளவில் தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டும் பிரத்யேகமாக லைசென்ஸ் பெறும் வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பிங்க்டே முறை அமல்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு தனது துறைகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் போன்றவற்றை பட்டியலிட்டுள்ளார்.
சந்திர பிரியங்காவின் இந்த கடிதம் அவர் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக உள்ளது. இது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.